நாகர்கோவில்: நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்தவர் தாணுமூர்த்தி(58). இவர்தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார் பதிவாளராகப் பணிபுரிகிறார்.
இவர் ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சார் பதிவாளராகப் பணியாற்றியபோது, 2020 டிசம்பர் 15-ம் தேதி,செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், இவரதுஅலுவலகத்தில் சோதனை நடத்தி, ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வீட்டில்100 பவுனுக்கு மேல் தங்க நகைகளை கைப்பற்றினர்.
பின்னர், தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளராக தாணுமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சார் பதிவாளர் தாணுமூர்த்தி மீது செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் பெஞ்சமின் தலைமையிலான போலீஸார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.19.70 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், வீட்டுக்கான ஆடம்பரப் பொருட்கள் வாங்கியதற்கான ரசீது மற்றும் ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றினர். அதேபோல, திங்கள்நகர் காந்தி நகரில்உள்ள தாணுமூர்த்தியின் மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தினர்.