சென்னை: தாமரையை பாஜகவின் சின்னமாக ஒதுக்கியதில் விதிமீறல் இருப்பதை நிரூபிக்காவிட்டால் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது அநீதி என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது எனவும் கூறி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டி.ரமேஷ், நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘‘பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியிருப்பதை ரத்துசெய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, தாமரை சின்னத்தை பாஜகவுக்கு வழங்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதில் விதிமீறல் உள்ளது என்றும், இதுதொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதையேற்று விசாரணையை வரும் டிச.8-க்கு தள்ளிவைத்துள்ள நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. தாமரையை பாஜகவின் சின்னமாக ஒதுக்கியதில் விதிமீறல் இருப்பதை மனுதாரர் நிரூபிக்காவிட்டால் அபராதத்துடன் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும்’’ என எச்சரித்துள்ளனர்.