சென்னை: அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் முதலாவதுஅகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு ஓய்வூதியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தூல் தலைமை வகித்தார். அ.சவுந்தரராஜன் வர வேற்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘நாட்டில் நிலவி வரும் பொருளாதார, சமூக, அரசியல் சூழல் குறித்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டங்களை மீறும் ஆட்சியாளர்களால் நமது நாடு சவால்களை எதிர்கொண்டு வரு கிறது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் பேசும்போது, ‘‘தேர்தலுக்கு முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாட்டை நாம் செய்தாக வேண்டும். மீண்டும் மத்தியில் பாஜக பதவிக்கு வரும்பட்சத்தில், ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் அல்லது நிச்சயமாக குறைக்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் மு.அன்பரசு, அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர்களின் சம்மேளன பொதுச்செயலாளர் என்.எல்.தரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், வரவேற்புக்குழு பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், முதுநிலை பொறியாளர்கள் சங்கதலைவர் ஏ.வீரப்பன் உள்ளிட்டோர்உரையாற்றினர்.
தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக 8-வதுமத்திய ஊதியக் குழுவை அமைக்கவேண்டும். அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பயணத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘குறைந்த பட்சமாக அனைவருக்கும் ரூ.12ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதுபோன்ற ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் டெல்லியில் மாபெரும் இயக்கத்தை முன்னெடுப்பதாக முடிவு செய்துள்ளோம்’’ என்றார். மாநாட்டில், 22 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.