தமிழகம்

திமுகவினருக்கு தீபாவளி பணப் பரிசாக ரூ.140 கோடி விநியோகம் - மாவட்டத்துக்கு ரூ.2 கோடி வழங்கல்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை: திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி கமிட்டியினருக்கு கட்சித் தலைமை வழங்கிய தீபாவளி பரிசுப் பண விநியோகம் நேற்று தொடங்கியது. அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்களில் சுமார் ரூ.140 கோடி வரை வழங்கப்படுவதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி நவ.12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைய சிறப்பாக கொண்டாட திமுக கட்சி நிர்வாகிகளுக்கு ரொக்கப் பணம் தீபாவளி பரிசாக வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இத்தொகையை மாவட்டச் செயலாளர்களிடம் கட்சித் தலைமை வழங்கி உள்ளது. தலைமை உத்தரவின்படி நிர்வாகிகளுக்கு பணப் பரிசு விநியோகத்தை மாவட்ட செயலார்கள் நேற்று தொடங்கினர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், செயற்குழு உறுப்பினருக்கு தலா ரூ.10 ஆயிரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், ஒன்றியச் செயலாளர்கள், நகர் செயலாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம், பேரூராட்சி செயலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்,

வார்டு செயலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், ஒன்றிய நிர்வாகிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம், பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், கிராம கிளை செயலாளர்-ரூ.2 ஆயிரம், வாக்குச்சாவடி வாரியாக 10 பேர் கொண்ட கமிட்டிக்கு ரூ.5 ஆயிரம் என பரிசுப் பணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதன்படி ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக ரூ.2 கோடி தேவைப்படும். தமிழகத்தில் மொத்தம் 72 மாவட்டங்கள் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ளன. இதனால் ரூ.140 கோடிக்கும் மேல் பரிசு பணம் வழங்கப்படுகிறது. கட்சி வழங்கிய பணத்துடன் மேலும் ஒரு தொகையை சேர்த்து சில மாவட்ட செயலாளர்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் பட்டியலில் இடம் பெறாத பிரதிநிதிகள், 23 அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சில பதவியில் உள்ளவர்களுக்கும் பணப் பரிசை மாவட்ட செயலாளர்கள் வழங்கியுள்ளனர். மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரிசுப் பண விநியோகம் துவங்கியது. ஒன்றிய நிர்வாகிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு கிளை வாரியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த தீபாவளி, தைப்பொங்கலின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் இந்த ஏற்பாடுகள் நடந்தன. தற்போது அவர் சிறையில் இருப்பதால் பணப் பரிசு கிடைக்குமா என நிர்வாகிகள் சந்தேகத்தில் இருந்தனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியினரை ஊக்கப் படுத்த கட்சித் தலைமை தீபாவளி பணப் பரிசை வழங்கி உள்ளது.

திமுக இளைஞரணி மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடக்கவுள்ளது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்க ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற தீபாவளி பணப் பரிசு உதவும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT