ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மம்சாபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 114 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீ. மழை பதிவானது.
ராஜபாளையம் அருகே மேலராஜ குலராமன் ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரி கிராமத்தில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை பணிக்காக நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டது. இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் முத்துக் கருப்பநாடார் தெருவில் உள்ள வன்னியராஜ் (62) என்பவரது வீடு நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய வன்னியராஜை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர். அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். வீடுகள், பள்ளிகள், பொது இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
இதனால் மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.