புதுக்கோட்டை: தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியம் தீபாவளிக்குள் வழங்கப்படுமா என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஊரகப் பகுதியில் பொருளாதாரம் மற்றும் உட் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2005-ம் ஆண்டில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ.294 வீதம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை நாட்களை கணக்கிட்டு, அவரவர் வங்கிக் கணக்குகளில் ஊதியத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் புதிதாக குளம், குட்டை, ஊருணி, வாய்க்கால் வெட்டுதல் மற்றும் சீரமைத்தல், நீர்ப்பாசனத் தொட்டி கட்டுதல், புதிய சாலை அமைத்தல் மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் தமிழகத்தில் 91.78 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, ஊதியத்தை விரைந்து வழங்க வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதால், அதற்குள் நிலுவை ஊதியம் வழங்கப்படுமா என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வக் கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ-வுமான எம்.சின்னதுரை, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) கிடைக்கும் ஊதியம்தான் பல குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், கடந்த 4 மாதங்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கவில்லை.
இதைப் பெறுவதற்காக தொழிலாளர்கள் தினமும் உள்ளாட்சித்துறை அலுவலகங்கள், வங்கிக் கிளைகளுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி நீர் உரிய நேரத்துக்கு, உரிய அளவு திறந்து விடப்படாததால், பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100 நாள் வேலை திட்டத்தையே பிரதானமாக மக்கள் நம்பி உள்ளனர். இதற்கான தொகையை மத்திய அரசு விடுவிக்காததால், மாநில அரசால் ஊதியம் வழங்க முடியவில்லை என தெரிகிறது. தீபாவளி நேரமாக இருப்பதால் ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலியுடன் சென்று, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.
இது குறித்து மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பி.செந்தில் குமாரிடமும் செல்போனில் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அப்போது, அவர் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கிடைக்கும் ஊதியம் தான் பல குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக உள்ளது என்று அவர் கூறினார்.