தமிழகம்

பெரிய வெங்காயம் விலை உயர்வு எதிரொலி: பண்ணை பசுமை கடைகளில் ரூ.30-க்கு விற்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பெரிய வெங்காயம் விலை அதிகரித்து வரும் சூழலில், கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2 வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் விற்பனை செய்ய, தமிழக அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வரின் உத்தரவுப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத்துறை மூலம் முதல் கட்டமாக சென்னையில் செயல்பட்டுவரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் நேற்று முன்தினம் முதல் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ளூர் சந்தையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படும் நிலையில் கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT