திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழகத்துக்கு உரிய தண்ணீர்விட கர்நாடக அரசு மறுப்பது வேதனைஅளிக்கிறது. மாநில பேதமின்றி, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால், ஏற்கெனவே ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிவிட்டன. காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. எனவே, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
தமாகா மக்களவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. தீபாவளிக்குப் பிறகு மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரியில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியில் தமாகா இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.