காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம்செய்து விபத்தில் சிக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த யூடியூபர் வைகுந்தவாசன், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் வைகுந்தவாசன் கைது செய்யப்பட்டு, 45 நாட்கள் சிறையிலிருந்தார். பிறகு, பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வாசன் 3வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த 3-ம் தேதி இவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வாசன் நேற்று வந்தார். அவர், காவல் ஆய்வாளர் நிவாசன் முன்னிலையில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு பிரதியை வழங்கி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அவர், நாள்தோறும் காலை 10:30 மணி அளவில் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையே நேற்றுமுதல் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது, ``செஞ்சது போதும் அண்ணே, இப்ப கெஞ்சுவீங்க, அப்புறம் மிஞ்சுவீங்க, காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் நின்றோம் பேட்டி கொடுங்க என்று கேட்டார்கள். அதனால் கொடுத்தோம். உங்களால முடிஞ்சத செஞ்சிட்டீங்க; ரொம்ப நன்றி. அதில் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல; எமக்குத்தான் கஷ்டம்'' எனக் கூறினார்.
வாசன் வந்ததை அறிந்த இளம் ரசிகர்கள் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும், காரில் ஏற வந்த அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். காவல் நிலையம் முன்பு அவரைக் காண வந்த ரசிகர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.