சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்: இன்னும் 2 மாதங்களுக்கு டெங்குவின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணிக்கு காய்ச்சல், இருமல் பிரச்சினை இருந்து வந்ததால், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.