தமிழகம்

100 நாள் வேலை திட்டத்தை முடக்க நினைக்கிறது மத்திய அரசு: ஆளுநருக்கு துரை வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கும்பகோணம்: 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கி, அந்தத் திட்டத்தை முடக்கநினைக்கிறது என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நடைபெறவுள்ள 4 மாநில தேர்தல் இந்த வெற்றிக்கு முன்னோட்டமாக அமையும்.

கூட்டணி சார்பில் மதிமுக போட்டியிடும் தொகுதி தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவு செய்யும். அதுகுறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜகவை எதிர்க்கும் இயக்கங்கள் மற்றும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவர்களை அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ மூலமாக பாஜக அச்சுறுத்தி வருகிறது. தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில், இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள், பாஜகவின் தோல்வி பயத்தையே காட்டுவதாக நினைக்கிறேன்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு படிப்படியாக குறைத்துக் கொண்டு வருகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2.72 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், கடந்தஆண்டு வெறும் ரூ.70 ஆயிரம்கோடியும், நிகழாண்டு அதைவிடக் குறைவாகவும் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற முடிவில் மத்திய அரசு இருக்கிறது.

இதையே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி, அமைதியை கெடுக்கும் சூழலை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT