சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு ஒய்வில் இருக்கும்படி மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவம்பர் 3-ம் தேதி இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரல் ஃப்ளூ (viral flu) காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுமாறும், அடுத்தசில நாட்களுக்கு ஓய்வு இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.