தமிழகம்

இனிப்பு - காரங்கள் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கடைகளில் இனிப்பு - கார வகைகள் தயார் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், இனிப்பு, கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் தலைமையில், அதிகாரிகள் ராஜா உள்ளிட்ட குழுவினர் கூட்டத்தில் பங்கேற்று தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அப்போது அதிகாரிகள், ‘உணவு தயாரிக்கும் இடத்தில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்.

சுவர்களில் கரி படிந்திருக்க கூடாது. முக்கியமாக பூச்சி, எலிகள் நடமாட்டம் இருக்க கூடாது. இனிப்பு, கார வகைகளில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கலாம். செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யக்கூடாது.

சிலர் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து சீசனுக்காக ஆர்டர் எடுத்து இனிப்புகள் தயாரித்து வருகின்றனர். அவர்கள் தங்களது விவரங்களை கொடுத்து தற்காலிக உரிமம்பெற்றுக் கொள்ளலாம். அதைவிடுத்து, பாதுகாப்பின்றி, சுகாதாரமின்றி இனிப்பு - கார வகைகளை தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான புகார் களை பொது மக்கள் 94440 42322 என்ற வாட்ஸ் - அப் எண்ணில் பதிவு செய்யலாம்’ என்றனர்.

SCROLL FOR NEXT