மதுரை: “தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை; ஆனால், கொசுக்கள் உற்பத்திதான் அதிகரித்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்ம நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை. ஆனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. கொசுக்களால் சிக்குன் குனியா, டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கெனவே சக்தி வாய்ந்த மருந்துகள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கொசுக்களை கட்டுப்படுத்த நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது தமிழக சுகாதாரத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணையில் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில பூச்சிக்கொல்லி மருந்து ரசாயனங்களால் வேறு நோய்கள் பரவுகின்றன. இந்த அச்சுறுத்தலிருந்து மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கொசுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, அவற்றை உண்ணும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் உயிர்க்காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. ஆனாலும் ,கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்கள் பரவுகின்றது.
தமிழகத்தில் நாங்கள் தொழில் புரட்சியை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே என்னவென்றால், கொசுக்கள்தான் உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும், பருவ மழையால் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்த தவறவிட்டால் மரணம் போன்ற நிகழ்வு ஏற்படும். ஆகவே, உற்பத்தியாகும் கொசுக்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நீர்நிலைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அரசு தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.