சென்னை: சென்னையில் விட்டுவிட்டு பெய்த மழையால், செக்போஸ்ட் பகுதி மற்றும் கிண்டி, ஆதம்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைவெள்ளத்தால், வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த அக்.21-ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், பரவலாக தமிழகம் முழுவதும் மழைபெய்து வருகிறது. சென்னையிலும், அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், நேற்று முன்தினம் இரவுமுதல் தொடர்ந்து விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
அந்த வகையில் வேளச்சேரி,கிண்டி, ஆதம்பாக்கம் உள்ளிட்டஇடங்களில் பெய்த தொடர் மழையால், கிண்டி, ஆதம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் அங்குள்ள தெருக்களில் தேங்கியது. குறிப்பாக, கிண்டி செக்போஸ்ட் பகுதி, ஐந்து பர்லாங் சாலை, வண்டிக்காரன் சாலை, கிண்டி மடுவங்கரை, பெரியார் நகர், நேரு நகர், நேதாஜி தெரு, ஆதம்பாக்கம் தலைமைச் செயலக குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சில இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.
வேளச்சேரியில் இருந்து கிண்டி சர்தார் படேல் சாலை நோக்கி செல்லும் ஐந்து பர்லாங் சாலை, செக்போஸ்ட் பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால், வேளச்சேரி, விஜயநகரம் பகுதிகளில் இருந்து கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை நோக்கிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வேளச்சேரி 100 அடி சாலையில், விஜயநகரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிண்டி மடுவங்கரை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார்நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்தசிரமத்துக்குள்ளாகினர்.
இப்பகுதிகளில் உள்ள தெருக்களில், முழங்கால் அளவுக்கு தண்ணீர்தேங்கியதால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தனர். வாகனங்களில் செல்வோர் பள்ளம், மேடு அறிய முடியாமல், சிரமப்பட்டனர். மதியம் 1 மணியளவில் முக்கியமான சாலைகளில் தண்ணீர் குறைந்தாலும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடிய நேரம் ஆனது. இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரேஸ்கோர்ஸ் மழைநீர்: கிண்டியில் 100 ஏக்கர் பரப்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அந்தமழைநீர் மாநகராட்சியின் ஒப்புதல் இன்றி சாலையில் வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில்பெய்த மழைநீருடன், ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து வெளியேறிய மழைநீரும் சேர்ந்து அங்குள்ள சாலைகளிலும், உட்புறச் சாலைகளிலும் புகுந்து நீர்த்தேக்கமடைந்தது.
இதையடுத்து இணை ஆணையர்கள் தலைமையில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, தேங்கியுள்ள மழைநீரை வடிகால் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றினர்.
மேலும், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி செடிகளை அப்புறப்படுத்தி, மழைநீரைக் கட்டுப்பாட்டு முறையில் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் சுற்றுப்புறச் சாலைகள் மாநகராட்சியால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.