தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுகஇளைஞரணி மற்றும் மருத்துவரணி, மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கப்பட்டுள் ளது.

அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற, அமைச்சர் உதயநிதி நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ்தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் விவகாரத்தில் கடந்த 6 ஆண்டுகளில் அனிதாவில் தொடங்கி 22 குழந்தைகள் வரை தற்கொலை செய்துள்ளனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி,நீட் தேர்வை ரத்து செய்வதற் கான முயற்சிகளை திமுக அரசுதொடர்ந்து எடுத்து வருகிறது.

இதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்தை பெற திட்டமிட்டிருக்கிறோம். இணையதளம் மூலமாக 3 லட்சம் கையெழுத்து பெற்றிருக்கிறோம். இதுவரை 8 லட்சம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து வாங்கியுள்ளோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் கையெழுத்து பெற இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் கல்வி, மருத்துவ உரிமை சார்ந்த பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் சர்வாதிகார போக்கையும், மாநில அரசுகளின் உரிமைகளை வழங்காமல் இருப்பதை எதிர்த்தும் நடத்தப்படும் இந்த மக்கள் இயக்கம் வெற்றி பெறும். 3 வேளாண் சட்டங்களைப்போல நீட்டையும் பிரதமர் மோடி திரும்பப் பெறும் சூழலை தமிழகத்தில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால்தான் நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., அசன் மவுலானாஎம்எல்ஏ, கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, உ.பலராமன்,எஸ்சி அணி தலைவர் ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், டில்லி பாபு,எம்.எஸ். திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT