நீட் தேர்வுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் கையெழுத்துகளை பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழகம்

“பாஜகவின் அணிகளாக ஐடி, அமலாக்கத் துறை செயல்படுகின்றன” - அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: "காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை. இந்தத் துறைகள் எல்லாலாம் பாஜகவினுடைய அணிகள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நீட் தேர்வுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் கையெழுத்துகளைப் பெற்றார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று, சேலம் இளைஞரணி மாநாட்டில் அதை சமர்ப்பித்து, குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பி வைப்பதுதான் எங்களுடைய இலக்கு. ஆன்லைன் வழியாக தங்களது கையெழுத்தைப் பதிவு செய்யலாம். இதுவரை, 3 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம்.

அதுபோல், 10 லட்சம் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு, இதுவரை 8 லட்சம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்துப் பெற்றுள்ளோம். இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன்" என்றார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அது வழக்கமாக நடப்பதுதான். இப்போது காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை. ஐடி, அமலாக்கத் துறை இவையெல்லாம் பாஜகவினுடைய அணிகள். அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை சட்டப்படி சந்திப்போம்" என்று பதில் அளித்தார்.

தேர்தல் நெருங்குவதால் மிரட்டும் வகையில் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே பாஜக அணிகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கின்றன" என்றார் உதயநிதி.

SCROLL FOR NEXT