மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரிக்கு அனுமதி வழங்க, கல்லூரி கட்டிட உறுதித் தன்மை குறித்த பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளரின் சான்றிதழ் அவசியம் தேவை என உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கல்வி அறக் கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி உள் ளது. இக்கல்லூரியில் 2014-15ம் கல்வி ஆண்டுக் கான மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக அனுமதி வழங்கவும், பொறியியல் கலந்தாய்வில் தயா கல்லூரியைச் சேர்க்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் ஜூலை 1-ம் தேதி உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை வந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி வாதிட்ட தாவது: தயா பொறியியல் கல்லூரிக்கு 2013-14ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகக் குழு ஆய்வு நடத் தியது. கல்லூரி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்றிதழ், மின்வசதி குறித்த சான்றிதழ் மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆண்டாண்டு காலம் நெல் விளைந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டியதில் நகரமைப்பு விதிகள் மீறப்பட்டுள் ளன. இது தொடர்பாக மதுரை ஆட்சியர், நக ரமைப்பு துணை இயக்குநர் ஆட்சேபம் தெரிவித் துள்ளனர். இவற்றைக் கருத்தில்கொண்டே கடந்த கல்வியாண்டில் அனுமதி மறுக்கப்பட்டது.
தயா பொறியியல் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சமாக நடக்கவில்லை. ஒரு கல்லூரிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விதிகளில் சம்பந்தப்பட்ட கல்லூரி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என உள்ளது.
சென்னையில் பல மாடி கட்டிடம் சரிந்த சோக சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. எனவே கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்த சான்றிதழ் மிகமிக அவசியமாகும்.
மேலும், கல்லூரி சார்பில் நடப்பு கல்வி ஆண் டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அனுப்ப வில்லை. கடந்த ஆண்டில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த கல்வி ஆண்டு அந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிந்துவிட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். விசாரணையை வியாழக் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.