மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அதிமுக கவுன்சிலர்களையும், தடையை மீறி ஊர்வலமாக அங்கு செல்ல முயன்ற அதிமுக எம்எல்ஏக்களையும் போலீஸார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் மெஹரீபா பர்வின் தலைமையில் கடந்த 31-ம் தேதி நடைபெற்ற போது, ஆணையர், பொறியாளர் பங்கேற்காததால் கூட்டம் நடத்த அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திமுக, அதிமுக கவுன்சிலர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக கவுன்சிலர் ஒருவர்நாற்காலியை தூக்கி அதிமுக கவுன்சிலர்கள் மீது வீசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்களான முகமது இப்ராகிம், தனசேகர், சுனில் குமார், மருதாசலம், முத்துசாமி, குரு பிரசாத், மீரான் மைதீன், விஜயலட்சுமி ஆகிய 8 பேர், நகர் மன்றக் கூட்டரங்கில் கடந்த 31-ம் தேதியில் இருந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜிஅருண்குமார் ஆகியோர் கட்சித்தொண்டர்களுடன் நேற்று மாலை ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்தனர்.
அப்போது போலீஸாருக்கும், எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி செல்ல முயன்ற 2 அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 அதிமுக கவுன்சிலர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
கூட்டரங்கில் இருந்து வெளியேற மறுத்த கவுன்சிலர்களை போலீஸார் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். தகவல் அறிந்த அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலு மணி மேட்டுப்பாளையம் வந்தார். கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘நாற்காலியை எடுத்து வீசி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபோராடியவர்களை போலீஸார் கைது செய்தது ஆளும் கட்சியின் அராஜகத்தை காட்டுகிறது. திமுக ஆட்சியில் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இது தொடர்ந்தால் அதிமுக சார்பில் கோவையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.