சென்னை: கோபாலபுரம் குத்துச்சண்டை அகாடமி, 9 தொகுதிகளில் சிறு அரங்கங்கள், தென்காசியில் மாவட்ட விளையாட்டு வளாகம் என ரூ.49.79 கோடி பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நீலகிரி, பெரம்பலூர், வேலூர், கோயம்புத்தூர், சென்னையில் ரூ.23 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டிடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம்,செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை ஹாக்கி மைதானம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் கடந்தாண்டு டிச. 18-ம் தேதிநடைபெற்ற விழாவில் அறிவிக்கப்பட்டபடி, பட்டக்குறிச்சி கிராமத்தில் ரூ.15 கோடியில் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, சென்னை கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருப்பத்தூர்- வாணியம்பாடி, திருப்பூர் - காங்கேயம், மதுரை - சோழவந்தான், தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம், புதுக்கோட்டை - ஆலங்குடி, சிவகங்கை - காரைக்குடி மற்றும் கன்னியாகுமரி - பத்மநாபபுரம் ஆகிய 9 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி செலவில் ரூ.27 கோடியில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடியில் குத்துச்சண்டை அகாடமியும் அமைக்கப்பட உள்ளது. இப்பணி களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மதுரையைச் சேர்ந்த பாரா தடகள வீரர் எஸ்.மனோஜ், தஞ்சாவூரைச் சேர்ந்த தடகள வீரர் ஆனந்தன், அதே ஊரைச் சேர்ந்த தடகள வீராங்கணை ரோஸி மீனா ஆகிய 3 விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்துக்கான பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.