புதுச்சேரி: தமிழக, புதுச்சேரி ஆளுநர் மாளிகைகள் நேர்மையாக செயல்படுவதாக, எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருந்தது. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செப்டம்பர் 5-ல் அளிக்கப்பட்டது. இச்சூழலில் அதிகாரிகளால் மருத்துவ மாணவர் சேர்க்கை காலதாமதம் ஆனது. முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன்பு நடந்தது. அதன்பின்பு நடந்த 2 கட்ட கலந்தாய்வும் காலதாமதமாக நடந்தது. கால தாமதமாக நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசுக்க கடிதம் எழுதியிருந்தார்.
தேசிய மருத்துவ ஆணையமும் காலதாமதம் குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் தரும்படி புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காலதாமதமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 15-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவ சேர்க்கை குளறுபடிக்கு காரணமாக சென்டாக் அதிகாரிகள் நீக்கப்பட்டனர். மருத்துவம் மற்றும் பொறியியல், கலை கல்லூரிகளுக்கு கலந்தாய்வு நடத்தும் ஒருங்கிணைந்த சேர்க்கை குழுவான சென்டாக் கன்வீனர் சிவராஜ் நீக்கப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு மாறுதல் கேட்டிருந்தார். அவரும் மாற்றப்பட்டார். அவர்களுக்கு பதிலாக உயர் கல்வி இயக்குநர் அமன் சர்மா, கஸ்தூரி பாய் கல்லூரி முதல்வர் ஷெரில் ஆன் சிவம் ஆகியோர் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் கலந்தாய்வு மையத்தை இன்று ஆய்வு செய்தார். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா காலதாமத மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: "மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு மத்திய அரசு அளித்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. இதனால் 353 மாணவர்கள் பலனடைவார்கள். கால நீட்டிப்பு என்பது பல மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும், இயற்கை மருத்துவ மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான முயற்சிக்குப் பிறகு சட்ட ரீதியாக கால நீட்டிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.
வரும் 7-ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்குகிறது. மாணவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதால் ஆன்லைனில் தெரிவிக்கலாம். முறைகேடு இருப்பது என மாணவர்கள் தெரிந்தால் உடனடியாக ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். மாணவர் சேர்க்கையின்போது முதலில் இருமுறை வெளியிடப்படும் பட்டியலில் சந்தேகம் இருந்தால் தெரிவித்தால் அதை நிவர்த்தி செய்து இறுதி பட்டியல் வெளியாகும்.
மாணவர் சேர்க்கை மிக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு குழப்பம் ஏற்படுத்தி தாமதம் ஏற்படுத்திய அதிகாரிகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக ரீதியாக அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். எதிர்க்கட்சியினர் சொல்லும் முன்பு அதிகாரிகள் செயல்பாட்டை நாங்களே குற்றம்சாட்டி நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், அதனை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
அவர்கள் ஆட்சி காலத்தில் 10% இடஒதுக்கிடு பெறவில்லை. இதற்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் முன்பு அணுகவில்லை. 13 ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட்டை கூட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்யவில்லை, நாங்கள் பெஸ்ட் மற்றும் ஃபாஸ்ட் புதுச்சேரியாக இயங்குகிறோம். எதிர்க்கட்சியினர், பாஜக அலுவலகமாக தமிழக, புதுச்சேரி ஆளுநர் மாளிகைகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இரு மாநில ஆளுநர் மாளிகைகளும் நேர்மையாக செயல்படுன்றன" என்று தமிழிசை கூறினார்.