சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இதில், சென்னை நகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் விழாவில் வரவேற்புரை ஆற்றினார். அப்போது, அவர் பேசுகையில், சென்னை நகரில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 5 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்படுகிறது. முன்பு பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு 7 நாட்கள் வரை ஆனது. தற்போது இது 3 நாட்களாக குறைந்துள்ளது. இதற்காக, சென்னை நகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 4.5 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்படும்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக ஏதாவது தகவல்கள் பெற விரும்பினால் வார வேலை நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் 4 மணி வரை சென்னை, அண்ணாசாலை ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம்.
அதேபோல், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிமுதல் மதியம் 1 மணி வரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டுகளை விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், திறமையான முறையிலும் விநியோகம் செய்ய சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடமைப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், தற்போதுடிஜிட்டல் யுகத்தில் அனைவரும் உள்ளோம். சைபர் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, டேட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சென்னைமண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடத்தியவிநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பரிசுகளை வழங்கினார். விழாவில், துணை பாஸ்போஸ்ட் அதிகாரி எஸ்.ரவிக்குமார் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.