சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பறக்கும் ரயில் வழித் தடத்தில் 3 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுஉள்ள நிலையில், எஞ்சிய 3 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலைபரங்கிமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது.இதன்படி, வேளச்சேரி-பரங்கிமலை இடையே உள்ள 5 கி.மீ. துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப்பணி 2008-ல் தொடங்கப்பட்டன.
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, இந்த தடத்தில் கடந்த ஆண்டு முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மேம்பால பாதையை இணைக்கும் வகையில், அங்குள்ள ரயில் பாதைக்கு மேல், இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் பாதை திட்டம் ரூ.734 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையில் ஏற்கெனவே துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில்50 மீட்டர் நீளத்தில், 3.1 மீட்டர் உயரம் கொண்ட ஆறு இரும்பு தூண்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 3 இரும்பு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.
எஞ்சிய 3 இரும்பு தூண்கள் 3 நாட்களுக்குள் நிறுவப்படும். இதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. இப்பணிகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும். எஞ்சியுள்ள பணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் முடியும் என்றனர்.
இதற்கிடையே, இப்பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நேற்று முதல் நாளை (3-ம் தேதி) வரை இரவு நேரத்தில் 9 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மன்னார்குடி, திருச்சி, மங்களூரு ஆகிய ரயில் சேவைகள் நாளை வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.