தமிழகம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத்தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி

செய்திப்பிரிவு

போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 750 கோடி ரூபாய் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, "போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில்

அக்கறை கொண்ட தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இது வரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்,

பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசினார்.

SCROLL FOR NEXT