சென்னை: சென்னை நந்தனத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழக பாஜகவின் அலுவலகமாக ஆளுநர் மாளிகை செயல்பட்டு கொண்டிருக்கிறது என முதல்வர் கூறியிருக்கிறார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றியோ, மாநிலத்தின் முன்னேற்றம் பற்றியோ கவலை இல்லை. அவரது பேச்சு, எண்ணம் முழுவதும் பாஜக மற்றும் ஆளுநரை சுற்றியே இருக்கிறது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், அங்கு நடந்த விஷயத்தைதான் ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்திருக்கிறது. மக்களுக்கு உண்மை எது என்பது தெரியும்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கோவையில் காரில் சிலிண்டர் எடுத்து வந்து வெடிக்க வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது, கேரளாவிலும் பயங்கரவாத செயல்போல வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. மாநில அரசுகள் சட்டம் - ஒழுங்கையும், பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்த தவறினால், இது போன்ற நிகழ்வுகள்தான் நடக்கும்.
நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த தேசிய தலைவர்களை எல்லாம், குறிப்பிட்ட சமுதாய எல்லைக்குள் நாம் அடக்கி வைத்து கொண்டிருக்கிறோம் என்ற தனது கருத்தைதான் ஆளுநர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான் அரசின் முயற்சியாக இருக்க வேண்டும்.