தமிழகம்

பழனிசாமி கார் மீது கற்கள் வீச்சு: வழிமறித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கார் மீது கற்கள் வீசப்பட்டன. மேலும், காரைவழிமறித்து சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை மதுரையிலிருந்து காரில் புறப்பட்டார். செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் அவரது காரை சிலர் வழிமறித்து, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தி அங்கிருந்து பழனிசாமியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரிசையில் நின்றபோது இளைஞர்கள் சிலர் ‘எடப்பாடி ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்த இபிஎஸ்வெளியேறு’ என கூச்சலிட்டனர். அப்போது பழனிசாமியுடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கும், கோஷமிட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் நினைவிடக் கேட்டைப் பூட்டி, கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

கற்கள் வீச்சு: பின்னர், தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, வெளியே செல்லும்போது, பசும்பொன் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் அருகே ஒருவர் கற்களை வீசினார். இதையறிந்த போலீஸார் அந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது, ‘‘தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர் தேவர். எம்.பி, எம்.எல்.ஏ என ஒரே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர். பசும்பொன் தேவர் விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், தேவர் உருவப்படத்தை சட்டப்பேரவையிலும் திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 13.5 கிலோ தங்கக் கவசத்தை தேவருக்கு அணிவித்தும், சென்னை நந்தனத்தில் தேவர் சிலை அமைத்தும் மரியாதை செய்தார்’’ என்றார்.

SCROLL FOR NEXT