சென்னை: தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக இரு சங்க நிர்வாகிகளும் இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுகாண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொர் ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் டெண்டர் எடுப்பதிலும்பிரச்சினை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பட்டாசு மொத்த விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த் ஆஜராகி, எந்த தகுதியும் இல்லாத, விற்பனையில் அனுபவமில்லாத ஒரு புதிய சங்கத்தை டெண்டரில் பங்கேற்க அனுமதியளித்துள்ளனர். இது சட்ட ரீதியாக தவறு என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, பட்டாசு கடைகளுக்கான டெண்டர் நடைமுறை மற்றும் ஒதுக்கீட்டில் எந்த தவறும் இல்லை. சென்னை பட்டாசு மொத்த விற்பனையாளர்கள் நலச்சங்கம் மற்றும் சென்னை பட்டாசு வணிகர்கள் சங்கம் என இரு சங்கங்களும் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இந்தாண்டு மொத்தம் 60 கடைகள் அமைக்கப்படும். இதில் 17 கடைகளை வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரரின் சங்கத்துக்கு ஒதுக்க அதிகாரிகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவி்க்கப்பட்டது.
புதிதாக மாற்றியது தவறு: அதையடுத்து நீதிபதி, பட்டாசு விற்பனைக்கான டெண்டர் நடைமுறைகளையும், விதிகளையும் புதிதாக மாற்றியிருப்பது தவறு. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் 2 சங்க நிர்வாகிகளும் இன்று (அக்.31) மதியம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் முன்பாக ஆஜராகி, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.