சென்னை: தொடர் புகார்கள் காரணமாக புழல் சிறையில் பணியாற்றி வந்த மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
புழல் மத்திய சிறையில் மருத்துவர் கீர்த்தி வாசன் உட்பட 3 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், கைதிகளை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதாகவும் மருத்துவர் கீர்த்தி வாசன் மீது புகார்கள் எழுந்தன.
சமீபத்தில் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதியை மேல்சிகிச்சைக்காக வெளியே செல்ல அனுமதி வழங்காததால் அந்த கைதி உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக (டிஎம்எஸ்) அதிகாரிகள், மருத்துவர் கீர்த்திவாசனை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்தனர். தற்போது, புழல் சிறையில் 2 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.