மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களின் மனதில் ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களின் அனுபவத்தை ‘தி இந்து’வுடன் பகிர்ந்துகொண்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு வீரர் கிரன்மோரி:
நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன். மீட்பு குழுவில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. மீட்பு பணியில் முதல் முறையாக ஈடுபடுகிறேன். விபத்து நடந்த இடத்திற்கு நான் வந்ததும், ஒரு இடத்தை சுட்டிகாட்டி இடிந்த பகுதிகளை அகற்றுமாறு கூறினர். அதை நான் செய்த போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சிலர் உயிருடன் இருந்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். மொத்தம் 5 பேரை நான் காப்பாற்றினேன். அவர்களைத் தூக்கிச் சென்றபோது, அவர்களின் உறவினர்கள் என்னை பாராட்டினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு புரியவில்லை. என்னால் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. 5 பேரின் உயிரை காப்பாற்றியதை நினைக்கும்போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது.
அம்பத்தூர் தீயணைப்பு படை வீரர் கணேஷ் பாண்டியன்:
கட்டிட இடிபாடுகளுக்கு இடையே துளையிட்டு குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி மீட்பு பணிகளை செய்து வருகிறோம். 3 நாட்களாக நான் இங்கேயேதான் இருக்கிறேன். ஒவ்வொரு கான்கிரீட் துண்டையும் உடைத்து அகற்றும்போது, ஏதாவது குரல் கேட்காதா, யாரையாவது உயிருடன் மீட்டு விட மாட்டோமா என்ற எண்ணத்தில் தான் செயல்பட்டு வருகிறேன். ஆனால் இறந்துபோன இருவரின் உடல்களைத்தான் என்னால் மீட்க முடிந்தது.
108 ஆம்புலன்ஸ் உதவியாளர் மேகலா:
சாலை விபத்துகளில் சிக்கிய பலரை நான் மீட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய கட்டிடம் இடிந்து அதில் சிக்கிய பலரை சோதித்து ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வது இதுதான் முதல்முறை.
கட்டிட இடிபாடுகளையும் அவற்றிற்கு இடையில் இருந்து மனிதர்கள் மீட்கப்படுவதையும் பார்த்து அதிர்ந்து விட்டேன். 3 பேரை எனது ஆம்புலன்ஸில் அழைத்து சென்றேன். அவர்கள் 3 பேரும் உயிருடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.