சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாஜகவினர் மீது 409 பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, ஆய்வு நடத்த வந்த 4 பேர் கொண்ட பாஜக உயர்நிலைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து இதுதொடர்பான மனுவை அளித்தனர்.
தமிழகத்தில் பாஜகவினர் மீது பொய் வழக்குகள் தொடரப்படுவதாகவும், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்த கவுடா எம்.பி., ஆந்திரா மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் சத்ய பால் சிங் எம்.பி., பி.சி.மோகன் எம்.பி., ஆகியோர் இடம்பெற்றனர். இந்த குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது.
பல்வேறு சம்பவங்களில் வழக்கு தொடரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பாஜகவினரிடம் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பேசி பாஜக குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கொடி கம்பம் விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் 6 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து, கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தையும் அந்த குழு பார்வையிட்டு, நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டது. பின்னர் அதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட மனுவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் குழுவினர் அளித்தனர்.
பின்னர், பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் குழுவினர் கூறியதாவது: சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை பகிர்ந்ததற்காக பாஜக நிர்வாகிகள் பலர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் பாஜக நிர்வாகிகள், மற்ற கட்சியினர் மீது புகார் கொடுத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.
பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட இடத்தில், பல கட்சி கொடிகள் இருக்கின்றன. அதனை அகற்றாமல், ஏன் பாஜக கொடியை மட்டும் அகற்றுகிறார்கள். மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் இடையூறு ஏற்படுத்தவே இத்தகைய செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜகவினர் மீது 409 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜகவினர் வஞ்சிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். கொடி கம்பம் அகற்றப்பட்ட அன்று சாலை மறியலில் ஈடுபட்ட மசூதியை சார்ந்த நபர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை. இதுதொடர்பான மனுவை தமிழக ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். இந்த அறிக்கை ஜெ.பி.நட்டாவிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் வழங்க இருக்கிறோம். இந்த பிரச்சினைகளை அமித் ஷா கவனித்துக் கொண்டிருக்கிறார். மாநில பிரச்சினையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.