சென்னை: தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட, பெண் வாக்காளர்கள் 9.85 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, 2024 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகத்தில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8,016 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2023 ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். உயிரிழந்தவர்களின் பெயர், இரட்டை பதிவுகள் ஆகியவை கண்டறிந்து நீக்கப்பட்டதில், தற்போது 9 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 65 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 30 வாக்காளர்களும் உள்ளனர். 18-19 வயதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். அதிகபட்சமாக 40-49 வயதினர் 1 கோடியே 37 லட்சம் பேர் உள்ளனர். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இதுவரை 4 கோடியே 23 லட்சம் பேரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 89 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 68 ஆயிரத்து 154 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகள் இருந்தன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான சிறப்பு முகாம்கள் வரும் நவ.4, 5 மற்றும் 18, 19-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளன. 17 வயது முடிந்தவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம், அவர்களுக்கு எந்த காலாண்டில் 18 வயது நிறைவடைகிறதோ, அப்போது அவர்களது பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் ‘ஓட்டர் ஹெல்ப்லைன் (Voter Helpline) செயலி மூலமாகவும், https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வரும் டிச.9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.