தமிழகம்

மாமல்லபுரம் | மகளிர் உரிமை தொகை கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த முள்ளிகொளத்தூர் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, அப்பகுதி பெண்கள் கல்பாக்கம் - திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தை அடுத்த முள்ளிகொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தகுதியிருந்தும் தங்களுக்கு கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து கல்பாக்கம், திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருக்கழுகுன்றம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, கால அவகாசம் வழங்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வரவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாங்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான். அப்படி இருந்தும் யாருக்கும் பணம் வரவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் பேசிவிட்டு செல்கிறார்கள். ஆனால்,முறையாக யாரும் பதில் அளிப்பதில்லை. முறையாக மகளிர் உரிமை தொகை பயனாளிகளை தேர்வு செய்யாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

SCROLL FOR NEXT