சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முன்பு, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க, மாடுபிடி வாகனத்துடன் மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம்பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதோடு விபத்து மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் உரிய சட்ட விதிகளின்படி தன்னிச்சையாக நடமாடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சாலையில் மாடுகள் நடமாடுவது தொடர்கிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 2 பேரை சாலையில் சுற்றும் மாடுகள் முட்டி, காயப்படுத்தின. அதனால், குறிப்பாக பார்த்தசாரதி கோயில் பகுதியில் சுற்றும் மாடுகளைப் பிடிக்க தனியாக மாடுபிடிக்கும் வாகனமும்,பணியாளர்களும், கால்நடை மருத்துவர்களும் கடந்த 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றும்மாடுகளுக்கு எதிராக மாநகரம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மாநகரம் முழுவதும் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.