சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30, 31 மற்றும் நவ. 1-ம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பெருந்திரள் அமர்வுப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பொதுத் துறை ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கே.ஆறுமுகநயினார், ஸ்ரீதரன், வி.அர்ஜுனன், டி.வி.பத்மநாபன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றும், தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்தும் 20 சதவீத போனஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 30-ம் தேதி மட்டும் சென்னையில் பெருந்திரள் அமர்வுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.