சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பணியாற்றிய ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலை, கோவை ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கோவையில் பிறந்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர் கடந்த 1919-ம் ஆண்டு கோவை நகராட்சி துணை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1920-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சட்டப் பேரவை தலைவராகவும், தொழில் ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், மகாத்மா காந்தியின் ஆலோசனையின்படி சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக 1947-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர், மெட்ராஸ் தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவரானார். இவர் சைமா, சிட்ரா, இந்திய தொழில் வர்த்தக சபை ஆகிய தொழில் அமைப்புகளை உருவாக்கினார். பேரூர் தமிழ் கல்லூரி, லண்டன் தமிழ் சங்கம், தமிழ் இசை சங்கம் உருவாக உதவிகரமாக இருந்தார். கடந்த 1951-ம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். இவர், 1953-ம் ஆண்டு மே 5-ம் தேதி காலமானார்.
சிலை திறப்பு
டாக்டர் ஆர்.கே.சண்முகம் அறக்கட்டளை சங்கம் சார்பில் கோவை ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் அவரது சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலையை சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் எம்.மாணிக்கம் திறந்து வைத்தார்.
விழா குறித்து டாக்டர் ஆர்.கே.சண்முகம் அறக்கட்டளை சங்க நிர்வாகி பி.வி.கே.ஜவகர் கூறியதாவது:
சண்முகம் செட்டியாரின் சிலையை பொது இடத்தில் வைக்குமாறு தமிழக அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த அரசும் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால், வேறு வழியின்றி அவர் தோற்றுவித்த பள்ளி வளாகத்திலேயே சிலை வைத்துள்ளோம் என்றார்.