சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாகக் கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி விநாயகர் கோயில் தெருவில் காலி நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர். 
தமிழகம்

கிருஷ்ணகிரி | அகசிப்பள்ளியில் தெருவில் தேங்கும் கழிவுநீர்: கொசுக்கடியால் இரவில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் கொசுக்கடி தொல்லையால் இரவில் தூங்க முடியவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தெருவில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய் அடைப்பைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள அகசிப்பள்ளி ஊராட்சியில் செந்தில்நகர், விநாயகர் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஓராண்டாக அடைப்பு ஏற்பட்டுக் கழிவு நீர் செல்ல முடியாமல் தெருவிலும், தனியாருக்குச் சொந்தமான காலி நிலத்திலும் தேங்கி வருகிறது.

மேலும், தேங்கிய சாக்கடை நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும், இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட சிலர் கூறியதாவது: இங்குள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஆண்டுக் கணக்கில் தெருவில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற நிலையும் நிலவி வருகிறது.

மழைக் காலங்களில் கழிவுநீருடன், மழை நீரும் சேர்ந்து 3 அடி உயரத்துக்கு சாலையில் தேங்கிவிடுகிறது. பல நேரங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால், பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறோம். குறிப்பாக, தெருவில் தேங்கும் கழிவுநீரால் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, மாலை நேரங்களில் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை. இரவு நேரத்தில் கொசுக்கடியால் தூங்க முடியவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாய் அடைப்பைச் சீர் செய்து, சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT