கோவை: கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த 24-ம் தேதி உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், அதற்கு முழு ஆதரவை வழங்கி வரும் அமெரிக்க அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது தடையை மீறி ஏறிய சிலர், பாலஸ்தீனத்தின் கொடியைக் கட்டினர். இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி, உக்கடம் போலீஸில் புகார் அளித்தார். அதில், அனுமதியின்றி ஒன்று கூடி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி, புதிதாக கட்டியிருக்கும் பாலத்தின் மேல் ஏறி பாலஸ்தீனக் கொடியைப் பறக்கவிட்டு மக்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சபீர் அலி, அபு என்ற அபுதாகீர், ரபீக் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேர் மீதும் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.