நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்வரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்தை விட அக்டோபர் மாதத்தில் இரு மடங்கு அதிகம் மழை பதிவாகியுள்ளது. இந்த மாதம் இதுவரை 500 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன. 1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
களியல் பகுதியில் நேற்று கனமழை கொட்டி பெய்தது. இங்கு 38 மில்லி மீட்டர் மழை பதிவானது. . திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. 77 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணைியில் நீர்மட்டம் நேற்று 71.15 அடியை எட்டியுள்ளது.
அணைக்கு 396 கன அடி தண்ணீர் வருகிறது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரளியாறு, அருவிக் கரை, மூவாற்று முகம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.42 அடியாக உள்ளது.
அணைக்கு 498 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 220 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. நேற்றும் மழை நீடித்ததால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்ட உள்ளதையடுத்து கோதையாறு, திற்பரப்பு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.