சேலம்: ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்குப் பின்னர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்ட பயணிகள், சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி சென்னை சென்றனர்.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை, பெங்களூரு, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட முக்கிய நகரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இந்நிலையில் சிறிய நகரங்களான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், தலைவாசல் உள்ளிட்ட இடங்களில், பயணிகள் சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் நள்ளிரவு வரை அவதிப்பட்டனர்.
இது குறித்து பயணிகள் கூறியது: சேலம் மாவட்டத்தில் பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சென்னையில் படிக்கின்றனர், அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்று கின்றனர். அவர்களில் பலர் தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை கால விடுமுறை ஆகியவற்றின் போது சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், அவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் வருவதற்கும், மீண்டும் சென்னை செல்வதற்கும் பேருந்துகளில் இருக்கை பெறுவதற்கு, ஒவ்வொரு முறையும் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. பேருந்துகளில் முன்பதிவு வசதி இருந்தாலும் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் நிலையிலும் பலர் உள்ளனர். ஆனால், முன்பதிவற்ற இருக்கைகளுக்கு சேலத்துக்கு வரும் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. இதனால் பலரும் நின்று கொண்டே பயணித்து சொந்த ஊர் வருகின்றனர். இதேபோல, விடுமுறை முடிவுற்று சென்னை திரும்பும் போதும், சேலம் தவிர வழித் தடத்தில் உள்ள சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை பேருந்துகளில் இருக்கை வசதி கிடைப்பது அரிதாகவே உள்ளது.
மேலும், பேருந்துகளில் இருக்கை நிரம்பி விட்டால், பேருந்துகளை வழியோர சிறு நகரங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். குறிப்பாக, ஆத்தூர், வாழப்பாடி, பெத்த நாயக்கன் பாளையம், தலைவாசல் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் நள்ளிரவு வரை காத்திருந்து கிடைத்த பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிவுற்ற நிலையில், நேற்று முன்தினம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் கிடைக்காமல் இரவு வரை காத்திருந்த பயணிகள், கூடுதல் செலவு செய்து சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு பேசி சென்ற இக்கட்டான நிலையும் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக, மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும்,
தொடர் விடுமுறை நாட்களில் குறைந்த பட்சம் ஒரு பேருந்தினை அந்த வட்டங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் இயக்க வேண்டும். இதேபோல, சென்னையில் இருந்து அந்தந்த வட்டங்களுக்கும் ஒரு பேருந்தை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.