சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் வசிப்பவர் தேவஜவஹர். திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது தந்தை தேவசகாயம். தாயார் பத்மாவதி (83). அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 17-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த பத்மாவதி தரையில் இறந்து கிடந்தார். அவரது கையில் லேசான சிராய்ப்பு காயம் இருந்தது. முதுமை காரணமாக அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என அனைவரும் நினைத்தனர். பிரம்மாண்ட இறுதி ஊர்வலம் நடத்தி அவரது உடலை எரித்துவிட்டனர்.
இந்த நிலையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தேவ ஜவஹரை வியாழக்கிழமை சந்தித்து, ‘உங்களின் தாயார் இயற்கையாக மரணம் அடையவில்லை. உங்கள் வீட்டுக்கு எதிரே வசிக்கும் கண்ணதாசன் தான் பத்மாவதியை கொலை செய்துவிட்டு 17 சவரன் செயின்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். நாங்கள் இருவரும் மது குடிக்கும்போது போதையில் இதை என்னிடம் உளறி விட்டார்’ என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவஜவஹர் கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவே கண்ணதாசன் (24) கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “கொலை செய்யப்பட்ட பத்மாவதியின் எதிர் வீட்டில் வசிப்பவர் கண்ணதாசன். இவர் அடிக்கடி பத்மாவதி வீட்டுக்கு சென்று அவருக்கு உதவிகளை செய் திருக்கிறார். கண்ணதாசனின் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் பத்மாவதி யின் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் நன்றாக தெரியும். கடந்த 17-ம் தேதி பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்திருக்கிறார் கண்ணதாசன். பின்னர் அங்கு சென்று பத்மாவதியை மூச்சுவிட முடியாதபடி அழுத்தி அவரை கொலை செய் திருக்கிறார்.
பின்னர் பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 3 செயின்களில் 2 செயின் களை மட்டும் எடுத்துக்கொண்டு, கம்மல், வளையல் சிறிய செயின் போன்ற வற்றை அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டார். நகைக்காக கொலை செய்யப் பட்டது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்.
பத்மாவதி இறந்து கிடப்பதையும் கையில் சிராய்ப்பு காயம் இருப்பதையும் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள் ளாமல், அவர் வயதான காலத்தில் தவறி விழுந்து இயற்கை மரணம் அடைந் திருக்கலாம் என்று கருதி உடலை எரித்துவிட்டனர். பத்மாவதியின் மரணம் மீது எந்தவித சந்தேகமும் வராததால் கண்ணதாசன் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
அவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த கண்ணனிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி யிருந்தார். எனவே கொள்ளையடித்த நகையை விற்று அவரது கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்காக கண்ணனை அழைத்துக் கொண்டு நகை யுடன் ஒரு அடகுக் கடைக்கு சென்றார். அங்கு தனது பாட்டி செயின் என்று கூறி ஒரு செயினை மட்டும் ரூ.2 லட்சத்துக்கு விற்றிருக்கிறார் கண்ணதாசன். அதில் ரூ. 90 ஆயிரத்தை கண்ணனிடம் வாங்கிய கடனுக்காக கொடுத்துவிட்டு, மீதி பணத் துடன் இருவரும் மது குடிக்க சென்றனர்.
கண்ணதாசன் போதையில் இருந்த போது, ‘எதிர்வீட்டு பாட்டி பத்மாவதியை கொலை செய்து நகையை திருடினேன். ஆனால், அது தெரியாமல் உடலை எரித்துவிட்டனர். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. நீயும் வெளியில் சொல்லிவிடாதே’ என்று உளறியிருக் கிறார். இதைக் கேட்ட கண்ணன் நடுங்கி விட்டார்.
நகையை விற்று கடனுக்கான பணத்தை வாங்கியுள்ளதால் இதில் தாமும் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் நடந்த சம்பவங்களை திமுக கவுன்சிலர் தேவஜவஹரை சந்தித்து கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்தே கொலையாளி சிக்கியிருக்கிறார்” என்று போலீஸார் கூறினர்.