சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் கோரி அமலாக்கத் துறை தாக்கல்செய்துள்ள மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் அக்.30-க்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்தமாதம் சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் அக்.31-க்கு தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை தங்களுக்கும் வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயவேல், விசாரணையை வரும் அக்.30-க்கு தள்ளி வைத்துள்ளார்.