காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 456-வது நாளாக தொடர் போராட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐஐடி குழுவினரை இன்று கிராம மக்கள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில், சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்கள், குடியிருப்புகள் மொத்தமாக பறிபோவதாக கூறி ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் மக்கள் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 456-வது நாளாக கிராமப்பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஏற்கெனவே 6 முறை கிராம சபை கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இத்திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுதவிர, 3 முறை கிராம சபை கூட்டங்களை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செ. 15-ம் தேதி காஞ்சிபுரம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காண்பித்து தங்களது எதிர்ப்பு தெரிவிக்க போவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், கோரிக்கைகளை தலைமை செயலாளரை சந்தித்து தெரிவிக்கும் வகையில், நேரம் ஒதுக்கி தர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததால் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை கைவிட்டனர்.
அதேபோல், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை மற்றும் ஏரி ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருவதாக கூறியதாகவும், ஆனால், அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தைக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் நேற்று ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்த போராட்ட குழுவினரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், “மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐஐடி குழுவினரை சந்திக்க அக். 26-ம் தேதி (இன்று) ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உறுதியளித்துள்ளார். மேலும், விமானம் நிலையம் அமைக்க இது சரியான இடம் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் புள்ளி விவரத்துடன் கூடிய அறிக்கையை, மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினரிடம் வழங்க உள்ளோம்” என்றனர்.