ஓசூர்: அஞ்செட்டி அருகே உடுபரானி மற்றும் அத்தி நத்தம் மலைக் கிராமங்களில் தார் சாலை வசதியிருந்தும் பேருந்துகள் இயக்கம் இல்லாததால், கிராம மக்கள் 6 கிமீ தூரத்தை நடந்து கடக்கும் நிலையுள்ளது.
தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டியைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் இன்று வரை சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதில், உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட உடுபரானி மற்றும் கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தி நத்தம் மலைக் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
உரிகம் சோதனைச் சாவடியிலிருந்து உடுபரானி மலைக் கிராமத்துக்கு 5 கிமீ தூரம் தார் சாலை உள்ளது. அதேபோல, அத்திநத்தம் கிராமத்துக்கு 6 கிமீ தூரம் தார் சாலை வசதி உள்ளது. ஆனால், இக்கிராமங்களுக்குப் பேருந்து வசதி இல்லை. இதனால், இவ்விரு கிராம மக்களும் குறிப்பிட்ட தூரத்தை நடந்து கடந்து உரிகம் பிரிவு சாலையிலிருந்து அஞ்செட்டி மற்றும் உரிகத்துக்கு சென்று அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், இவ்விரு கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இக்கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் நகரப் பகுதிக்குச் சந்தைப் படுத்த இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் எடுத்து வருவதால், போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது.
மேலும், பல்வேறு ஊர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து இரவு 7 மணிக்கு மேல் வீடு திரும்பும் நிலையுள்ளது. அவசர சிகிச்சை மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட தூரம் நடந்து அல்லது பிற வாகனங்கள் மூலம் உரிகம் பிரிவு சாலைக்கு வந்து பேருந்தில் செல்லும் நிலையுள்ளது.
இரு கிராம மக்களின் சிரமத்தைப் போக்க அஞ்செட்டி - உரிகம் செல்லும் பேருந்தை இரு கிராமங்கள் வரை நீட்டித்து இயக்க வேண்டும் அல்லது அஞ்செட்டி, உரிகத்திலிருந்து இரு கிராமங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.