சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, இந்த நன்னாளில் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் 9-ம் நாளில் ஆயுத பூஜையும், 10-ம் நாளில் விஜயதசமியும் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இசை,ஞானம், அறிவு, கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்திடும் வகையில் நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள், நம் அனைவரின் வாழ்வில் வெற்றியையும், வளங்களையும் இந்த நவராத்திரியில் வழங்கிட அருள் புரியட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், அவர்களது வாழ்வில் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கல்விக்கும், அறிவுக்கும், திறமைக்கும், கருணை செய்யும் கடவுளான சரஸ்வதி தேவியையும், அன்னை பராசக்தியையும் வணங்கி வாழ்த்தும் பண்டிகையான சரஸ்வதி பூஜைமற்றும் ஆயுத பூஜை நாட்களில் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் தீமைகள் அகன்று, இனிவரும் காலத்தில் இருள் விலகி வெற்றித் தாமரைகள் மலரட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அறிவை தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் வளத்தையும் தரும் இயந்திரங்களை போற்றி வணங்கும் இந்த நன்னாளில் அனைவரும் சரஸ்வதி தேவியின் அருளை பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.
வி.கே.சசிகலா: ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளில் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சமக தலைவர் சரத்குமார்: செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப, தொழிலை வணங்குவதற்கான ஆயுத பூஜைதினத்திலும், வாழ்வின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக அமைந்த கல்வியை வணங்குவதற்கான விஜயதசமி தினத்திலும் மக்களின் எண்ணங்கள் ஈடேறவும், அனைவரது வாழ்வு வளம்பெறவும் இறை அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
இதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன் னீர்செல்வம் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.