சென்னை: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது மின்சார வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் வரை 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இதில், தமிழகத்தில் 4.14 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.
இந்நிலையில், அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம் தேசியநெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கி.மீ. தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம்அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது. அதில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் 100 இடங்கள் கண்டறி யப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி வாக னங்களை நிறுத்துவதற்கான வசதி, குடிநீர், ஓட்டுநர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதி, தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும். விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்றனர்.