சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோஎடையிலும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இதற்காக, ஏஜென்சிகளை நியமித்துள்ளது. இதுதவிர, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு சங்கங்களும் ஏஜென்சிகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகம் என்பதால், உணவகம், தேநீர் கடை போன்ற இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களை மறைத்து வைத்து பயன்படுத்துவதாக பரவலாக புகார் எழுகிறது. சிலிண்டர் விநியோகம் செய்ய செல்லும்போது, வீடு பூட்டியிருந்தால், அந்த சிலிண்டரை ஏஜென்சி ஊழியர்கள், கடைகளில் விற்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை பூங்கா நகர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சிந்தாமணி காஸ் ஏஜென்சியில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டுக்கு விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மாம்பலம்,ஆலந்தூர் ஏஜென்சிகளிலும் இதுபோல முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.30 லட்சமும், சிந்தாமணி ஏஜென்சிக்கு ரூ.6.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.