அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் 
தமிழகம்

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

எல்.மோகன்

கன்னியாகுமரி: ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மக்கள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பின்னர் குளிக்க இன்று (அக்.22) அனுமதி அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பெய்த தொடர் மழையால் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் ஓரளவு சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது. இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதைப்போல் அரசு விடுமுடறையும் இருப்பதால் சென்னை உட்பட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா திட்டத்தை வகுத்து வந்த மக்கள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், படகுத்துறை, கடற்கரை சாலை, மற்றும் பிற சுற்றுலா மையங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினர்.

நேற்று மழையும் குறைந்து, அவ்வப்போது சாரல் பொழிந்ததால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி மேற்கொண்டு விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தனர். மழையால் திற்பரப்பு அருவியல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி 10 நாட்களாகக் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று மிதமான தண்ணீர் கொட்டியதால் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். குமரி சுற்றுலா மையங்களில் இன்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடினர். தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், திற்பரப்பு பகுதியில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

SCROLL FOR NEXT