சீமான் | கோப்புப் படம் 
தமிழகம்

சமூக நீதியை சம நீதியாக வழங்க சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: சமூக நீதியை சம நீதியாக வழங்க சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

பர்கூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதியை சம நீதியாக வழங்க சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தேர்தல் வரும்போது தான் சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிய வருகிறது. மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. பாஜகவில் முதலில் 33 சதவீதம் இடஒதுக்கீட்டை கொண்டு வரட்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவில் அதிகாரிகள் நியமனம் சரியாக இல்லை.

இதேபோல நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என தெரிவிக்கிறது. முதலில் நீதிமன்றம் எதில் தலையிட முடியும், முடியாது என்ற பட்டியலை வெளியிட வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்கிற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட்டுத் தேர்வை எழுத சொல்கிறார்கள்.

மதுவை ஒழிக்க வேண்டும் என பொது நல வழக்கு தொடர்ந்தால், அது அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என நீதிமன்றம் கூறுகிறது. படிப்பதில் தலையிடும் நீதிமன்றம், குடிப்பதில் தலையிடுவது இல்லை. காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் தராத நிலையில், ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும்.

கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதல்வர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதல்வர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவைக் காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார். மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், மின் விநியோகம், சாலை பராமரித்தல், கல்விக் கொள்கை, உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்தது திமுக தான்.

மாநில உரிமைகளை விட்டு கொடுத்துவிட்டு, இந்தியாவை காப்பாற்ற போகிறாராம். மக்களவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT