ஓசூர் பத்தளப்பள்ளியில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணியைப் பூமி பூஜை செய்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கிவைத்தனர். 
தமிழகம்

ஓசூர் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு ரூ,550 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

ஓசூர் / கிருஷ்ணகிரி: ஓசூர் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்கு ரூ,550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஓசூர் பத்தளப் பள்ளியில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இதில், அமைச்சர் நேரு பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.1.200 கோடி மதிப்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். பென்னாகரத்திலிருந்து ஓசூருக்கு நீர் கொண்டுவர 60 அடி உயரம் இருப்பதாலும் தற்போது,

130 எம்எல்டி நீர் போதுமானதாக இல்லை என்பதாலும், ஓசூருக்காகவும், 2 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஜப்பான் நாட்டில் ரூ.8 ஆயிரம் கோடி நிதி பெற்று ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. ஓசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தை தொடங்க ரூ,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் விரைவில் டெண்டர் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஓசூரில் ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் மீன்மார்க்கெட் கட்டும் பணி மற்றும் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆட்சியர் கே.எம்சரயு, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, எம்பி செல்லகுமார், மேயர் சத்யா, எம்எல்ஏ-க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், துணை மேயர் ஆனந்தைய்யா, சுகாதாரக் குழு தலைவர் மாதேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.8.24 கோடியில் கூடுதல் வகுப்பறை: குந்தாரப்பள்ளி, அட்டகுறுக்கி, ஏனுசோனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் ரூ.8 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 39 வகுப்பறைகள் கட்டும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சியில் தெரு விளக்குகளை ஆற்றல் திறன் கொண்ட எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகளையும் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் கே.எம்.சரயு, எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ முருகன், நகராட்சித் தலைவர் பரிதா நவாப், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.நவாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT