தஞ்சாவூர்: தமிழ்நாடு மகளிர் ஆணையம் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். எம்எல்ஏ-க்கள் துரை.சந்திர சேகரன், டிகேஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் இ.காளி ராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி,
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பேசினர். முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் டி.அனுராபூ நடராஜமணி வரவேற்றார். தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் மண்டல இயக்குநர் ஏ.கார்த்திக் நன்றி கூறினார்.
முன்னதாக, பெண்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம். இது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியும், மத்திய அரசு கொண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.
இதுவரை தமிழகத்தில் மாணவ- மாணவிகள் 22 பேர் உயிரிழந்தும் மனம் இறங்காமல் உள்ள மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. குறைந்தது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க உள்ளோம். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நீதி கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு நல்ல தீர்வு எட்டும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.